நாட்டுத் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது வாலிபர் உடலில் பாய்ந்த பால்ரஸ் குண்டுகள்- மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்…!
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்த பழனிச்சாமி- ஆராய் தம்பதியினருக்கு 3 மகள்கள் மற்றும் லட்சுமணன்(19) என்கிற மகன். லட்சுமணன், நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். அந்தத் துப்பாக்கியில் பால்ரஸ் குண்டுகளை நிரப்பிக் கொண்டு அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து முயல் வேட்டைக்கு
செல்வாராம். அவ்வாறு இன்று(23-07-2024) அவர் முயல் வேட்டைக்கு சென்றிருந்தபோது காட்டில் துப்பாக்கியை சுத்தம் செய்ததாகவும், அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து அவரது உடலில் 30 பால்ரஸ் குண்டுகள் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லட்சுமணன் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா?, துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது எதிர்பாராத விதமாக வெடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.