Rock Fort Times
Online News

ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளையை தடுக்க தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?* முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேள்வி…!

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் அடிக்கும் பல மடங்கு கட்டணக் கொள்ளையை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது தவெக அரசு என்று திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திராவிட மாடல் ஆட்சியின் விடியல் பயணத்தை மாற்றி, விரிவாக்கம் செய்து வெற்றி பயணம் என ஸ்டிக்கர் ஒட்டி, ஆட்டோ டிரைவர்களையும், தனியார் பேருந்து உரிமையாளர்களையும் ஒரு பக்கத்தில் நட்டத்தில் விட்டு இன்னொரு பக்கம் பண்டிகை காலத்தில் சாமானிய மக்களிடம் இருந்து அறுவடை செய்ய வழியும் காட்டுகிறார்கள். இதனையெல்லாம் முன்கூட்டியே கணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய விஜய் அரசு, ஸ்டிக்கர் ஒட்டுவதில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நிர்வாகம் என்றால் என்னவென்றே இவர்களுக்கு தெரியவில்லை. பண்டிகை காலங்களில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டண உயர்வு இருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால், இப்போது 8 மடங்கு கட்டண உயர்வு என்பதெல்லாம் விசில் புரட்சி ஆட்சியில்தான் பார்க்கிறோம். அரசுப் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிட்டால், இது 12 மடங்கு அதிகம். இந்த பகிரங்கமான சுரண்டலை இதுவரை தமிழ்நாடு பார்த்ததில்லை. மாதாந்திரச் சம்பளத்தை நம்பி வாழும் நடுத்தரக் குடும்பம், பண்டிகைக்கு ஊருக்குச் செல்லவே முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். எப்படியாவது ஊருக்கு போக வேண்டும் என நினைப்பவர்கள் தங்களின் ஒரு மாதச் சேமிப்பை இழந்துதான் போக வேண்டும்.

அப்படி பயணிப்பவர்கள் எல்லோரும் இந்த ஆட்சியை கழுவி ஊற்றுவதை கோயம்பேட்டிலும், ஆலந்தூரிலும், கிளாம்பாக்கத்திலும் போக்குவரத்துறை அமைச்சர் பார்த்தால் ஆயிரம் ரீல்ஸ்கள் எடுக்கலாம். அரசு நிர்ணயித்த கட்டணக் கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பண்டிகைக் காலத்தில் கொள்ளை அடிப்பவர்கள் மீது போக்குவரத்து துறை அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அரசு மோட்டார் வாகனச் சட்டங்களும், விதிகளும் யாருக்காக இருக்கின்றன? போக்குவரத்து துறை என ஒன்று செயல்படுகிறதா? கட்டண கொள்ளையை தெரிவிக்க 24 மணி நேர உதவி எண்ணை விளம்பரப்படுத்தினீர்களே.. அப்படி நடவடிக்கை எடுத்ததற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்