ஒரு பெண்ணுக்கு உண்மையான ‘அணிகலன்’ எது? * மகளிர் கல்லூரி விழாவில் விளக்கம் அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:- கூடுதல் பொறுப்புணர்வை இந்த பாராட்டு விழா எனக்கு தந்திருக்கிறது. அடுத்து நாம்தான் வருவோம். அப்போது மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களை சேர்ந்த மாணவிகள்தான் அதிக பயன் பெற்றுள்ளனர். ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் மூலம் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தால் 8 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். 5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை திமுக அரசு மாற்றியுள்ளது. பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தின் மூலம் 19 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது. கடினமாக உழைக்க வேண்டும். எந்த துறையின் சாதனையாளர்களை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் அதில் அதிக முயற்சி செய்திருப்பார்கள். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. உங்கள் கல்விக்காக பெற்றோர்கள். தங்கள் பொருள், உழைப்பு எல்லாம் செலவிடுகிறார்கள். உங்களை பற்றி உங்களது பெற்றோர் பெருமையுடன் 4 பேரிடம் கூறினால், அதை விட மகிழ்ச்சி அவர்களுக்கு எதுவும் கிடையாது. பெண்கள் என்றாலே அழகுதான். ஆனால் படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன். போட்டி மிகுந்த உலகில் நிலைத்து நிற்க ஒரு டிகிரி மட்டும் போதாது. மேற்கொண்டு படிக்க வேண்டும். நாட்டிலேயே வறுமை மிகுந்த மாநிலமாக இருந்த தமிழகம், தற்போது பொருளாதாரத்தில் 2-வது இடத்தில் உள்ளது. உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு தமிழ்நாடு விளங்குகிறது. அதிக பெண்கள் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு. பெண்கள் பணிபுரிந்தால் ஒரு தலைமுறையே முன்னேறும். நீங்கள் படித்து வாழ்க்கையில் முன்னேறினால், அதுதான் நீங்கள் எனக்கு தரும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.