18-வது பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே திமுக, அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா, பாமக ஆகிய கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மதிமுக தேர்தல் அறிக்கை திருச்சியில் இன்று(06-04-2024) வெளியிடப்பட்டது. இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* மாநில அரசுகள் அதிகாரம் கொண்டதாக விளங்கிட வேண்டும் என்ற அடிப்படையில் மாநில சுயாட்சிக்காகவும் மத்தியில் கூட்டாட்சி முறை நிலவவும் உரத்து குரல் கொடுப்போம்.
* இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிறப்பிற்கும் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு கேடு விளைவிக்கும் பாஜக அரசின் சர்வாதிகார மதவாத செயல்பாடுகளை இதர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தடுத்து நிறுத்த முனைப்புடன் பாடுபடுவோம்.
* இந்தி திணிப்பையும், வேற்று மொழி ஆதிக்கத்தையும் கடுமையாக எதிர்த்து குரல் கொடுப்போம்
* தேசிய நூலாக திருக்குறளை அறிவித்திட மத்திய அரசை மதிமுக வலியுறுத்தும்.
* மத்திய அரசின் உயர்கல்வி வாய்ப்பை பெற நடத்தப்படுகின்ற நுழைவுத் தேர்வு மற்றும் தகுதி தேர்வுகளை ரத்து செய்து மேல்நிலைக் கல்வி மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றியும் உயர்கல்வியில் அனுமதியை உறுதிப்படுத்திட வலியுறுத்துவோம்.
* படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்று தர மதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்.
* நதிகள் நாட்டுடைமையாக்கும் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
* நடுவர் மன்ற தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் தடுப்பு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்க மதிமுக முனைப்புடன் செயலாற்றும்.
* புதிய அணைக்கட்டும் கேரள அரசின் முயற்சிகளை முழுமையாக முறியடிக்க மதிமுக போராடும்.
* விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக தனி நிதிநிலை அறிக்கை வெளியிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* வேளாண் கடன்களை தள்ளுபடி செய்து நிவாரணம் வழங்க மதிமுக வலியுறுத்தும்.
* ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை முற்றிலும் நீக்கவும், பழைய வரி விதிப்பு முறைக்கு மாறி மாநில அரசின் உரிமையை பாதுகாக்கவும் மதிமுக குரல் எழுப்பும்.
* ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.
* ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தரமாக தடை விதிக்க வலியுறுத்தப்படும்.
* தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
* விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.தூக்குத் தண்டனை முறையை இந்தியாவில் ஒலிக்க மதிமுக குரல் கொடுக்கும் என்பன உள்ளிட்ட 74 அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
அப்போது திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பூமிநாதன் எம்எல்ஏ, துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, பொருளாளர் செந்திலதிபன்,
திருச்சி மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு , டிடிசி சேரன், தமிழ்மாணிக்கம் மற்றும் திரளான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.