திமுக அரசின் சாதனைகளையும், மத்திய அரசின் வஞ்சகத்தையும் மக்கள் மத்தியில் எடுத்துரைப்போம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இன்று (ஜூலை 1) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 3 தொகுதிகளிலும் 871 வாக்குச்சாவடிகள் உள்ளன. அந்த வாக்குச்சாவடி பகுதி மக்களிடம் நேரடியாக சென்று திமுக அரசின் சாதனை திட்டங்களையும், மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு செய்யும் வஞ்சகங்களையும் எடுத்துக்கூறி மக்களை ஓரணியில் திரட்டுவோம். மண், மொழி, மானம் காக்க தான் ஓரணியில் தமிழ்நாடு என்பது செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய கல்வி நிதி வழங்கப்படவில்லை.இது போன்றவற்றை மக்களிடம் எடுத்து கூறுவோம். எதிர்கட்சியினர் வீடுகளாக இருந்தாலும் அவர்களையும் சந்திப்போம். 18 முதல் 25 வயதுள்ள இளைஞர்களை சந்தித்து அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக திமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறுவோம் என்று தெரிவித்தார். பேட்டியின்போது கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Comments are closed.