Rock Fort Times
Online News

*விஜய் பேசுனது கேக்கல…* திருச்சிக்கு திமுக தந்த வளர்ச்சிப்பணிகளை அவர் பாக்கல…* திமுக மீதான விஜயின் விமர்சனத்திற்கு திட்டங்களை பட்டியலிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டமான பதிலடி!

திமுக மீதான விஜயின் விமர்சனத்திற்கு திட்டங்களை பட்டியலிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டமான பதிலடி! மண் – மொழி – மானம் காக்க தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் என்கிற திமுகவின் முன்னெடுப்பு, செப்டம்பர் 17ம் தேதி கரூரில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழா மற்றும் செப்டம்பர் 20ல் நடைபெறும் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். அப்போது நடிகர் விஜய் நேற்று (செப்.13 ) திருச்சியில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது திருச்சிக்கு எந்த நலத்திட்டங்களையும் திமுக கொண்டு வரவில்லை என்பது குறித்த குற்றச்சாட்டு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விஜய் நேற்று திருச்சியில் பேசியது மைக் மக்கர் செய்ததால் சரியாக கேட்கல… அவர் திருச்சிக்கு திமுக கொண்டுவந்த நலத்திட்டங்களை பாக்கல… என பேசினார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் , கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மையமாக விளங்கும் திருச்சிக்கு எங்களால் எவ்வளவு நலத்திட்டங்களை கொண்டு வந்து சேர்க்க முடியுமோ, அவ்வளவு திட்டங்களை கொண்டுவந்து சேர்த்திருக்கிறோம். மூத்த அமைச்சர் கே.என்.நேருவும் நானும் எங்களால் முடிந்த அளவிற்கு திருச்சியை உயர்த்த பாடுபட்டு வருகிறோம். குறிப்பாக சர்வதேச தரத்தில் பஞ்சபூரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், அதற்கு அருகில் அமைய உள்ள கனரக சரக்கு முனையம், புதிதாக அமைய உள்ள காவிரி பாலம், 17 கோடி செலவில் கொண்டுவரப்பட்டுள்ள பறவைகள் பூங்கா, 1500 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் மணப்பாறையில் கொண்டு வரப்பட்டுள்ள டிஎன்பிஎல் தொழிற்சாலை, மணப்பாறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கலை – அறிவியல் கல்லூரி, திருவெறும்பூர், தொகுதிக்குட்பட்ட சூரியூரில் கொண்டுவரப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம், மினி ஒலிம்பிக் ஸ்டேடியம், டைட்டல் பார்க், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் அமைக்கப்பட்டு வரும் காமராஜர் நூலகம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். மக்கள் வளர்ச்சி பணியில் என்றென்றும் திமுக சலிக்காமல் போராடும். ஆகவே திமுக மீதான நடிகர் விஜயின் குற்றச்சாட்டுக்கு நாங்கள் செயல்படுத்திய செயல் திட்டங்களே பதிலாக இருக்கும் என காட்டமாக பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்