Rock Fort Times
Online News

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு…* தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிப்பு !

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜூன்19ம் தேதி கடையை மூடாததால் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் இருவர் மீது காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்களை நடத்தின. இந்த சம்பவத்தில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் ஏ1 குற்றவாளியாகக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டு 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், சுமார் 6 ஆண்டு விசாரணைக்குப் பிறகு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் இன்று (23.06.2026) மாலை தீர்ப்பு வழங்கினார். இது குறித்து நீதிபதி தெரிவித்ததாவது, “ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் போலீஸ்காரர்கள் அடித்ததால் தான் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகிறது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால் தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் ஒரே பகுதியில் தான் இருந்தார்கள் என செல்போன் டவர் மூலமாக தெரிய வந்துள்ளது. உயிரிழந்த ஜெயராஜிற்கு இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்தது, ஆனால் நோய் தொற்றால் இறக்கவில்லை. கைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு தாக்கியுள்ளது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது” என்று கூறி தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தார். மேலும், இந்த வழக்கின் தண்டனை விபரம் மார்ச் 30ம் தேதி தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்