Rock Fort Times
Online News

திருச்சி மணிகண்டம் அருகே ஆபத்தான வளைவில் அடிக்கடி கவிழும் வாகனங்கள்….

மயிலாடுதுறையில் இருந்து திண்டுக்கல்லுக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் அருகே வந்து கொண்டு இருந்தது. அங்குள்ள வளைவில் திரும்பிய போது திடீரென லாரி கவிழ்ந்தது. அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து லாரி மீது மோதியது. இதில், பேருந்து முன் பக்க கண்ணாடி உடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

தொடர்ந்து லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது. இந்த விபத்தின் காரணமாக மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த வாகனங்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதுகுறித்த தகவலின்பேரில் மணிகண்டம் போலீசார் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் இணைந்து போக்குவரத்தை சரி செய்து அவசர ஊர்தி மற்றும் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர், கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு  அந்த பகுதியில் இருந்து லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே பகுதியில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விராலிமலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, முன்னே சென்ற லாரி இதே வளைவில் திரும்பும்போது விபத்து ஏற்பட்டு கவிழ்ந்த நிலையில், இன்று மற்றொரு விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு லாரிகள் வளைவில் திரும்பி திண்டுக்கல் நோக்கி செல்லும் போது இது போன்ற விபத்து ஏற்படுவதாகவும், இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்