Rock Fort Times
Online News

அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பல்வேறு போட்டிகள்…!

* வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

உயர் பதவியில் இருந்தவர்கள், இருப்பவர்கள், அரசு பணியில் உள்ளவர்கள், சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளவர்கள் காலப்போக்கில் தாங்கள் படித்த பள்ளியை மறந்தே போய்விடுவார்கள். ஆனால், 65 வயதை தாண்டியவர்கள் ஒன்று சேர்ந்து, தாங்கள் படித்த பள்ளியை மறக்காமல் நன்றியோடு நினைவு கூர்ந்து, தங்களுக்கு பாடம் சொல்லித் தந்து ஓய்வு பெற்ற தற்போது 92 வயதை தாண்டும் ஆசிரியர்களை அழைத்து பாராட்டி அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று அடுத்து வரும் தலைமுறைக்கு தமிழக அளவில் போட்டிகளை நடத்தி, பரிசுகளை தந்து, ஒட்டுமொத்த செலவையும் தாங்களே ஏற்றுக்கொண்டு, இனிவரும் காலங்களிலும் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என செயல்படுகிறார்கள் என்றால் அதுதான் அந்தப் பள்ளிக்கு கிடைத்த பெருமை. பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை. தமிழகத்திலேயே ஒரே ஒரு பள்ளியாக சைனிக் ஸ்கூல் சொசைட்டி என்கிற அமைப்பால் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிற திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ள “சைனிக் பள்ளி” தான் அந்த பெருமைக்குரிய பள்ளி. லாப நோக்கோடு செயல்படும் பள்ளி அல்ல இது. கட்டுப்பாடுகள், கடுமையான தண்டனைகளை தருவார்கள் என்று அறியப்பட்ட பள்ளி. இங்கு படித்த மாணவர்கள் எந்த இடத்திலும் சோடை போனதில்லை. இதுவரை 600க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளை உருவாக்கி இந்த தேசத்திற்கு கொடுத்திருக்கிறது இந்த பள்ளி. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் டாக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில் பிராஜ்னா – 2024 என்ற தலைப்பில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றன. இதில், 13 பள்ளிகளில் இருந்து 190 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவ மாணவியர்களிடையே பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஷார்ட் பிலிம், பெயிண்டிங், வினாடி- வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விழா மற்றும் போட்டிகளுக்கு ராணுவ அதிகாரி மற்றும் பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் தலைமை தாங்கினார்.  இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்க பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்