திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, வேம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 1997ம் ஆண்டு வேம்பனூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் 20 சென்ட் புஞ்சை நிலத்தை வாங்கி அதில் வீடு கட்டி வசித்து வருகிறார். அந்த இடத்திற்கு பட்டா பெயர் மாற்றம் பெறுவதற்காக கடந்த 26.9.23 ஆம் தேதி விண்ணப்பம் செய்துள்ளார். பின்னர், இணையதளத்தில் பார்த்தபோது அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால், கருப்பன் தனிப்பட்டா வேண்டி மீண்டும் 19.1.2024 ஆம் தேதி இணையதளம் மூலமாக விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பமும் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று கேட்டபோது விஏஓ சோலைராஜ், உங்களுக்கு பட்டா மாறுதல் கிடைக்க வேண்டுமென்றால் எனக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு கருப்பன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றதும் இறுதியாக ரூ.7 ஆயிரம் தர பேரம் பேசியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பன், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில், சோலை ராஜிடம் லஞ்சப் பணத்தை கருப்பன் இன்று (23-01-2024) கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் குழுவினர் விஏஓ சோலைராஜை கைது செய்தனர் . அத்துடன் விஏஓ சோலைராஜ் பணம் பெறுவதற்கு உடந்தையாக இருந்த பாஸ்கர் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.