ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி : சொர்க்கவாசல் திறப்பு ( படங்கள் )
விழாக்கோலம் கொண்ட ஸ்ரீரங்கம்...
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி விழா.
இவ்விழா பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 12-ந் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 13 ந்தேதியிலிருந்து நம்பெருமாள் தினமும் காலை மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் புடை சூழ, பக்தர்கள் பின் தொடர அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கருட மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை வழிபட்டால் மாயையில் இருந்து விடுபட்டதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளு வதற்காக நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, கிளி மாலை உள்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்த நம்பெருமாள் ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள மணல் வெளியில் அதிகாலை 4.30 மணிக்கு காட்சியளித்தார். அப்போது அங்கு திரண்டு இருக்கும் பக்தர்களுக்கு மத்தியில் நம்பெருமாள் அருள் பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து சாதாரா மரியாதை அளிக்கப்பட்டு பின்னர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமா மணி ஆஸ்தான மண்டபத்தில் காலை 7:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்யலாம். மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவை நடைபெறும். இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை உபயக்காரர் மரியாதை வழங்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் 24-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
ராப்பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இதேபோல் ராப்பத்து உற்சவம் முடியும் வரை எழுந்தருளுவார்.
29-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 30-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. 2 – ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியா் எம். பிரதீப் குமாா் ஐஏஎஸ், மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன், மாநகர காவல் ஆணையா் என். காமினி ஐபிஎஸ், டி.ஐ.ஜி பகலவன், அமைச்சா் சேகா்பாபுவின் மனைவி சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.