Rock Fort Times
Online News

திருச்சியில் தனது மகன் துரை வைகோவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்ட வைகோ- தொண்டர்கள் அதிர்ச்சி…!

திமுக தலைமையிலான கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு பம்பரம் சின்னம் கிடைக்காததால் ஆரம்பம் முதலே எந்த சின்னத்தில் போட்டியிடுவது என சர்ச்சை நிலவி வந்தது. திமுக நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தங்களது ஆசையை வெளிப்படுத்தினர். ஆனால், நான் செத்தாலும் எங்களது சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று கண் கலங்கியபடி துரை வைகோ பேசியது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. அதன்படி, திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகின்றனர். மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில் தனது மகனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், துரை வைகோ மனிதாபிமானம் மிக்கவர். எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் என் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் என் இடத்தை நிரப்பியவர் அவர். நிர்வாகிகள் ஒப்புதலோடு தான் துரை வைகோ அரசியலுக்கு வந்தார். காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வறண்டு கிடக்கும் நிலையில் கர்நாடக அரசு மேக தாதுவில் அணை கட்டுகிறது. இதற்காக கர்நாடக அரசு 9,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கர்நாடகா அரசு செய்துள்ளது. அவ்வாறு அணை கட்டினால் கல்லணைக்கு தண்ணீர் வராது. ராணி மங்கம்மாள் கர்நாடகத்தில் கட்டப்பட்ட அணையை உடைத்து எறிந்தார். நான் அணையை உடைக்க சொல்லவில்லை. ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வந்திருக்கிறார். எந்த மாநிலத்திலும் இல்லாத திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வந்து மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடியொற்றி கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடியா அந்நாட்டு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அங்கு செயல்படுத்தியுள்ளார். தமிழகத்தில் இரண்டரை லட்சம் பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர் ஸ்டாலின். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்வாயிலாக லட்சக்கணக்கான பெண்கள் பயன் பெறுகின்றனர். அனைத்து தரப்பினருக்கும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தியவர் ஸ்டாலின். பிரதமர் மோடி தமிழகத்தை அழித்தொழித்து விடுவேன் என்கிறார். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவரது எண்ணம் ஈடேறாது. அகல் விளக்கு ஏற்ற தீப்பெட்டி பயன்படுகிறது. புகைப்பிடிப்பதற்கும் தீப்பெட்டி தேவைப்படுகிறது. ஆனாலும், புகை பிடிக்கும் பழக்கம் தற்போது குறைந்துள்ளதாக தெரிவித்த வைகோ தனது மகனும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளருமான துரை வைகோவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறினார் . இதனால், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒரு வழியாக சமாளித்து தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பிரச்சாரத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனி யாண்டி, மதிமுக துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொக்கையா, மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, டிடிசி சேரன், ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை 2024 திருகார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்

1 of 931

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்