Rock Fort Times
Online News

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்: திருச்சி மாநகராட்சி பகுதியில் 2 இடங்களில் முகாம்… மேயர் மு.அன்பழகன் ஆய்வு! (வீடியோ இணைப்பு)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களுடன் ஸ்டாலின்” என்கிற புரட்சிகரமான திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முகாம்கள் நடைபெறும் பகுதிகளில் வீடு, வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தீர்வு காணப்படுவதுடன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இந்த திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து திருச்சி மாநகராட்சி பகுதிகளில் முதல் கட்டமாக மண்டலம் 5- க்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றத்தில் 22வது வார்டுக்கும், மண்டலம் 1- க்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் பகுதியில் 1 மற்றும் 2 வார்டுகளுக்கு ஸ்ரீரங்கம் தேவி மஹாலிலும் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகியவை மக்களுக்கு சேவை புரிகின்றன. இதற்காக தனித்தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்தந்த துறைகளில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அலுவலர்கள் அவர்களுக்கு தகுந்த பதில் அளித்தனர். இம்முகாமை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்து தகுந்த ஆலோசனை வழங்கினர். அப்போது மாநகராட்சி நகர பொறியாளர் பி. சிவபாதம், மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் சின்ன கிருஷ்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்