இரண்டு காவல் அதிகாரிகள் “டார்ச்சர்”- எவ்வளவுதான் சகித்துக் கொள்வது?- திருச்சி பெண் காவலர் திடீரென ராஜினாமா செய்ததால் பரபரப்பு…! ( ஆடியோ இணைப்பு)
திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றியவர் மு.தமிழ்ச்செல்வி. இவர் தனது பதவியை ராஜினாமா செய்து
காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- நான் கடந்த 7 வருடங்களாக பழனி இருப்புபாதை காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக பணிபுரிந்தேன். எனது சொந்த ஊர் நிலக்கோட்டை. நான் பழனியில் பணிபுரிவதால் எனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒருவர் 11ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளார். இரண்டாவது பெண் குழந்தை ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவர்கள் இருவரும் பழனியில் படித்து வருகின்றனர். எனது கணவர் கூட்டுறவுத் துறையில் கொடைக்கானலில் பணிபுரிகிறார். இந்தநிலையில் நான், கடந்த 24-01- 2025 அன்று திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு தண்டனை பணியிடமாறுதல் செய்யப்பட்டேன். எனக்கு பழனியில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சி இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் எனது குடும்பம், எனது குழந்தைகளின் கல்வி, குடும்ப சூழ்நிலை முற்றிலுமாக சிதைந்து போய் உள்ளது.
எனது முதல் பெண் குழந்தை மார்ச் ஐந்தாம் தேதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கிறார். நான் மேலதிகாரிகளை எதிர்த்து பேசுவதாக கூறி இந்த பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுவரை நான் எனது பணியில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறேன். எந்த அலுவலுக்கும் செல்ல மாட்டேன் என்று நான் ஒருபோதும் மறுத்து கூறியதில்லை. நான் காவல் நிலையத்தில் யாருடனும் எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபட்டதில்லை. நான் நீதிமன்ற காவலராக பணி செய்தபோது திண்டுக்கல் வட்ட காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற ஆய்வாளர் ஒருவர் நீதிமன்ற அலுவல் தாண்டியும் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் என்னிடம் பேசு என்று வற்புறுத்தி கூறினார். அதேபோல சிறப்பு சார்பு ஆய்வாளர் ஒருவர், சார்பு ஆய்வாளர் அறையில் அனைத்து காவலர்களின் பெயருக்கு நேரே அவரது ஜாதியை எழுதி தொங்க விட்டிருந்தார்.( அதற்கான ஆதாரத்தை இணைத்து இருந்தார்). சிறப்பு சார்பு ஆய்வாளர் காவலர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார். அவர் என்னிடம் தேவையில்லாமல் பேசுவது, இரட்டை அர்த்தங்களில் பேசுவது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டார். அனைத்து காவலர்களும் ஒரு அலுவல் முடித்து வீட்டிற்கு சென்று விட நான் மட்டும் ஒரே நாளில் இரண்டு அலுவல் செய்ய கட்டாயப்படுத்தப் பட்டேன்.

10-08-2024 அன்று நடைமேடை அலுவலில் இருந்த பெண் காவலர் நாகலட்சுமி என்பவரை நடைமேடையில் ஒரு குடிகாரன் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. நான் அந்தப் பெண் காவலரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சம்பந்தப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு அரசு மருத்துவமனைக்கு செல்லாதீர்கள், அங்கு சென்றால் வழக்கு பதிவு செய்ய வேண்டி இருக்கும். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார். நாங்கள் மருத்துவமனைக்கு சென்று வருவதற்குள் அந்த குற்றவாளியை எந்த வழக்கும் செய்யாமல் அனுப்பி வைத்து விட்டார்கள்.
நான் மருத்துவ விடுப்பில் இருந்தாலும் என்னை பணிக்கு வருமாறு சிறப்பு சார்பு ஆய்வாளர் அழைத்தார். நான் மறுக்கவே, என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். அனைத்து காவலர்கள் மத்தியில் என்னை யூஸ்லெஸ், ஒழுக்கம் இல்ல…என்று அநாகரீகமாக பேசினார்.
இவ்வாறு அவர் நடந்து கொள்வது எனக்கு மிகுந்த மன உளைச்சலையும், வேதனையும் தந்தது. இதனால் இருப்புப் பாதை காவல் பணியில் இருக்கும் போது ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட தோன்றியது. ஆனால் எனது குடும்பத்திற்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டேன். ஆனால், இரவு பாராவில் தனியாகஇருந்த என்னிடம் இரவு 12 மணி வரை என்னையும், ஆய்வாளரையும் எதிர்த்து நீ இங்கு வேலை பார்க்க முடியாது, எங்க இரண்டு பேரையும் அனுசரித்து செல் என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பேசினார்.
சிறப்பு சார்பு ஆய்வாளரின் டார்ச்சர் குறித்து சம்பந்தப்பட்ட ஆய்வாளரிடம் பெட்டிசன் எழுதிக் கொடுத்தேன். ஆனால் அவர் பெட்டிசன் எழுதிக் கொடுக்கிற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க…
ஒரு ரிப்போர்ட் போட்டேன் என்றால் உங்களை தூக்கி எங்கேயாவது போட்டுருவாங்க… என்று என்னைத் தான் மிரட்டினார். ஒரு பெண் காவலர் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை யாரிடம் தான் சொல்வது,உயர் அதிகாரி என்று ஆய்வாளரிடம் சொன்னால் அவர் என்னைத்தான் திட்டுகிறார், மிரட்டுகிறார். ஒருமுறை சிறப்பு சார்பு ஆய்வாளர் பெண் காவலர்கள் அனைவரையும் கேவலமாக பேசினார். இதையெல்லாம் எவ்வளவுதான் சகித்துக் கொள்வது? இதுதொடர்பாக நான் மதுரை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தேன். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே என் மீது சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் ரிப்போர்ட் அனுப்பி என்னை திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். ஒருவேளை நான் அதிகாரிகளை எதிர்த்து பேசி இருந்தால் என்னை எச்சரிக்கை செய்திருக்கலாம். இல்லையென்றால் ஓஆர் ஏற்றி இருக்க வேண்டும். ஒரு மெமோ கொடுத்திருக்கலாம். பொது நாட்குறிப்பில் ஆவது பதிவு செய்திருக்க வேண்டும். எதுவுமே செய்யாமல் பொய்யாக ஒரு ரிப்போர்ட் அனுப்பி என்னை பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். நான் எனது குடும்பத்தை பிரிந்து இங்கு பணிபுரிந்தேன். எனது குடும்பத்தை பிரிந்து இருப்பதால் ஒரு குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. மற்றொரு குழந்தையின் அடிப்படைக் கல்வி பாதிக்கப்படுகிறது.ஒரு தாயாக இது எனக்கு பெரிய மன வேதனையை தருகிறது.
எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தவறு செய்யாத நான் என் குடும்பத்தை பிரிந்து என் குழந்தைகளை பிரிந்து தண்டனை அனுபவித்து வருகிறேன். காவல்துறையில் என் பணியை சிறப்பாக செய்ததை தவிர நான் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. தவறு செய்த இரண்டு அதிகாரிகள் அதிகாரத்தில் உள்ளவர்களை கைக்குள் வைத்துக்கொண்டு தவறே செய்யாத ஒரு பெண் காவலரை பலி வாங்க முடியும் என்றால் இந்த துறையின் மீதான என் நம்பிக்கை தகர்கிறது. எனக்கான எந்த நீதியும் இங்கு கிடைக்காது என்று எனக்கு தோன்றுகிறது. ஆகவே, எனது பணியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் ஆடியோ ஒன்றிலும் பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. இரண்டு காவல் அதிகாரிகள் தனக்கு டார்ச்சர் கொடுத்ததாக அவர் பேசிய ஆடியோ மற்றும் ராஜினாமா காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.