திருச்சி, துவாக்குடி சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதாக அப்துல்சமது எம்.எல்.ஏ. உட்பட மனிதநேய மக்கள் கட்சியினர் 300 பேர் மீது வழக்கு…!
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான சுங்கச் சாவடிகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும், மணப்பாறை எம்.எல்.ஏ.வுமான அப்துல்சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, அரியலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வேனில் வந்தவர்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர் சாவடியை அடித்து நொறுக்க போவதாக கூறியதால் போலீசார் சமரசம் செய்து அந்த சுங்க கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்தனர். பின்னர், சுங்கச்சாவடி முன்பு அப்துல்சமது எம்எல்ஏ தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில், மனித நேய மக்கள் கட்சியினர் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வரும் பகுதியில் உள்ள சுங்கசாவடி கண்ணாடி, கேமரா, வாகன தடுப்பு கட்டைகளை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போராட்டத்திற்கு அனுமதி இல்லாமல் கூடியது, சுங்கச் சாவடியை சேதப்படுத்தியது என இரண்டு பிரிவுகளில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்சமது உள்பட 300 பேர் மீது துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Comments are closed.