திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் பெரும்பாலான இடங்களில் இன்னும் முடிவு பெறவில்லை. முடிவு பெற்ற ஒரு சில இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் பலர் பள்ளங்களில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும், 41- வது வார்டு புத்துக்கோவில் தெருவில், பாதாள சாக்கடை திட்ட பணியின்போது போதிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளி ராஜ்குமார் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது ஒருபுறம் இருக்க திருவெறும்பூர் பகுதி காந்திநகர் எட்டாவது தெருவில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு தோண்டப்பட்ட பள்ளம் பெரிய அளவில் உள்ளது. அதன்மேல், பெயர் அளவிற்கு தகரத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். இந்த இடத்தில் பணிகளை விரைந்து முடித்து பள்ளத்தை மூடக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒப்பந்ததாரரும் கண்டு கொள்வதில்லை. திருவெறும்பூர் பகுதியில் பாதாள சாக்கடை பணியின் போது ஏற்கனவே வட மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த பள்ளம் யாரை காவு வாங்கப் போகிறதோ என்று தெரியவில்லை. பொது மக்களுக்கு இடையூறாக உள்ள இந்த பள்ளத்தை விரைவில் மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.