திருச்சி மேலப்புதூரில் பிரசித்தி பெற்ற புனித மரியன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலய பங்கு பெருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்னையின் திருக்கொடியை திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் பாதிரியார் சகாயராஜ், முத்தப்புடையான்பட்டி பங்கு தந்தை எஸ்.ஜான்கிறிஸ்டோபர் ஆகியோர் ஏற்றிவைத்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து தினமும் மாலை சிறப்பு மறையுரையுடன் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று ( 09.09.2023 ) இரவு நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை திருவிழா திருப்பலியும், மாலையில் ஆடம்பர திருப்பலியும் நடைபெற்றது. திருச்சி மறைமாவட்ட ஆயர் எஸ்.ஆரோக்கியராஜ் அருளாசியுடன் மறைமாவட்ட முதன்மை குரு எல்.அந்துவான் திருப்பலியை நடத்தி வைத்தார். ஆடம்பர திருப்பலியை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் மரியன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு மந்திரிக்கப்பட்டு தேர்பவனி தொடங்கியது. கான்வென்ட் ரோடு, மார்சிங்பேட்டை, பீமநகர், வேர்ஹவுஸ் வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. பின்னர் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டு, கொடியிறக்கம் செய்யப்பட்டு அனைவருக்கும் அன்பின் விருந்து அளிக்கப்பட்டது. தேர்பவனியில் பங்குதந்தை சவரிராஜ், உதவி பங்குத்தந்தை சகாயராஜ் மற்றும் பங்குமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.