திருச்சி மலை கிராமங்களில் எஸ்.பி வருண்குமாா் தலைமையில் போலீசாா் அதிரடி சோதனை – சாராய ஊறல் அழிப்பு…
முதியவருக்கு வலை வீச்சு...
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சப்பெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் திருவிழா காலங்களில் ஒரு சிலர் சாராய ஊறல் போட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் உதவி எண் 94874 64651 மூலம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாா் ஐபிஎஸ்சிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்போில் அவரது தலைமையில் , தனிப்படை அமைக்கப்பட்டு அந்த கிராமங்களை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பச்சப்பெருமாள்பட்டி தங்க நகரில் வசித்து வரும் சாமிகண்ணு ( வயது 60) என்பவரது வீட்டில் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். போலீசாரை கண்டதும் சாமிக்கண்ணு தப்பி ஓடி விட்டார். பின்னர் அந்த வீட்டை சோதனையிட்ட போது அங்கு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 1050 லிட்டர் சாராய ஊறல், விற்பனைக்காக வைத்திருந்த 90 லிட்டர் சாராயம், சிலிண்டர் – 2, ஸ்டவ் – 1, சாராய ஊரல் போட பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை தனிப்படையினர் கைப்பற்றினர். தப்பி ஓடிய சாமிக்கண்ணு குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பாரம்பரிய நெல் ரகங்களுக்கான பதப்படுத்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி பெற்றுள்ளதும் , அந்த பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு திராட்சையால் இயற்கை சாராயத்தை தயாரித்துள்ளார்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாமிக்கண்ணு சாராய தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது குக்கர் வெடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.