Rock Fort Times
Online News

திருச்சி வானொலி நிலைய முன்னாள் ஊழியர் கொலை வழக்கு: கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை….!

திருச்சி கோர்ட்டில் தீர்ப்பு...

திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவரது மனைவி இறந்து போகவே, பென்ஷன் பணத்தை வாங்கி வாழ்க்கையை ஓட்டி வந்த அவர், ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம் பகுதியில் தூங்கி வந்தார். அங்கு இடம் பிடிப்பது தொடர்பாக இவருக்கும், ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கல்யாண சுந்தரம் வீதியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி முருகேசனுக்கும்(39) இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி இரவு 10 மணி அளவில் கீழ உத்திரை வீதி வெள்ளை கோபுரம் அருகே படுத்து தூங்க இடம்பிடிப்பதில் கந்த சாமிக்கும், முருகேசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகேசன், கந்தசாமியின் சாதியை சொல்லி திட்டியுள்ளார். இதை கந்தசாமி கண்டிக்கவே ஆத்திரம் அடைந்த முருகேசன் அங்கிருந்த சிமெண்டு கல்லை எடுத்து கந்தசாமியின் தலை, முகத்தில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பலியானாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வமுத்துக்குமாரி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், கந்தசாமியை கொலை செய்த குற்றத்துக்காக முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.500 அபராதமும், அவதூறாக பேசிய குற்றத்துக்காக 3 மாதம் சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைதண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞா் கே.பி.சக்திவேல் ஆஜரானார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்