திருச்சி, பொன்மலை இரயில்வே குடியிருப்புப் பகுதி மக்களுக்கு 2 சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும் : துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்…!
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி தென்னக ரயில்வே கோட்ட மேலாளரிடம் கொடுத்த ஒரு கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சி மாநகரம், பொன்மலை கோட்டம், மேலக்கல்கண்டார் கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, மாஜி இராணுவ காலனி, அம்பிகாபுரம், நாகம்மை வீதி, மூகாம்பிகை நகர், மகாலெட்சுமி நகர், மாருதி நகர், விவேகானந்தா நகர், ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இரயில்வே தொழிலாளர்கள், இரயில்வே ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில், பொன்மலை இரயில்வே காலனி குடியிருப்பு காலியானதால், அங்கு இரயில்வே தொழிற்சாலைகள் அமைய இருக்கின்றது.
அதேநேரத்தில் அப்பகுதியில் இருந்த சுற்று வட்டாரப் பாதைகளை ரயில்வே நிர்வாகம் அடைத்துவிட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, தாங்கள் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும், பொன்மலை பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்றும் அப்பகுதியில் இருசக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் ரயில்வே நிர்வாகம் இரண்டு சுரங்கப் பாதைகள் அமைத்துத் தருமாறு ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.
Comments are closed.