திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க, அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் …!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கியது. அன்று முதல் ஒரு பெண் உள்பட 3 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்தனர்.
மனு தாக்கலுக்கு கடைசி நாள் 27ம் தேதி ஆகும். மனு தாக்கல் முடிய 2 நாட்களே உள்ளதால் இன்றைய தினம்(25-03-2024) மனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டினர்.
அதன்படி, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மதிமுக வேட்பாளர் துரை வைகோ, அதிமுக வேட்பாளர் கருப்பையா, அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திரண்டு வந்ததால் அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து மதிமுக வேட்பாளர் துரை வைகோ நிர்வாகிகளோடு திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதிமுக
இதேபோல திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் எம்பி ப. குமார், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அ.ம.மு.க.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்நாதன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன், பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தமிழ் மாநில காங்கிரஸ் குணா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர் .
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான ராஜேஷ் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரே நாளில் இன்று மனு தாக்கல் செய்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.