பயன்பாட்டுக்கு வந்தது, திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்… பேருந்து வசதியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு…!(வீடியோ இணைப்பு)
திருச்சி, பஞ்சப்பூரில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தை கடந்த மே மாதம் 9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தநிலையில் அந்த பேருந்து முனையம் இன்று( ஜூலை 16) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேருந்தில் பயணித்த பயணிகளிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மது பாலன், திருச்சி காவல் ஆணையர் காமினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க படாது. சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் இரண்டும் பயன்பாட்டில் தான் இருக்கும். நகரப் பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும். கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். நகரப் பேருந்துகள் அனைத்தும் மத்திய பேருந்து நிலையம் வந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், திருச்சி சிட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று தெரிவித்தார்.
Comments are closed.