பைக் ரேசிங் ஸ்பாட்டாக மாறிய திருச்சி வடக்கு ஆண்டார் வீதி – தினந்தோறும் நடக்கும் விபத்துகளால் பொதுமக்கள் திக் ! திக் ! (வீடியோ இணைப்பு)
மாநகர காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா?
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ளது வடக்கு ஆண்டார் வீதி. காலை முதல் இரவுவரை பொதுமக்கள் நடமாட்டத்தால் விறுவிறுப்பாக காணப்படும் இப்பகுதி, இப்போது பைக் ரேசிங் என்ற பெயரில் இளசுகள் கொடுக்கும் அலப்பறையால் பரபரத்துக் கிடக்கிறது. சாலை விதிகளை மதிக்காமலும், ஹெல்மெட் அணியாமலும், ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட பைக்குகளில் புழுதியும், புகையும் கிளப்பியபடி அசுரவேகத்தில் சென்று பொதுமக்களின் உயிருக்கு உலைவைக்கும் ரேசிங் விளையாட்டை மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதனால் இங்கு தினமும் குறைந்தது இரண்டு விபத்துகளாவது நடைபெறுவதாக குற்றம் சாட்டுகின்றனர் இப்பகுதி பொதுமக்கள். இதுகுறித்து நாம் விசாரித்த போது., திருச்சி மாநகரின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வடக்கு ஆண்டார் வீதி. சுற்றிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகமான இருப்பதால், திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களும், மாணவ மாணவிகளும் இங்கு அதிகமாக வந்து செல்கின்றனர். இதனால் காலை முதல் இரவு வரை இப்பகுதி பரபரப்பாக காணப்படும். திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலின் சித்திரை தேர் வலம் வரும் ரத வீதிகளில் வடக்கு ஆண்டார் வீதியும் ஒன்று. இதனால் இங்கு வேகத்தடை என்பது இல்லவே இல்லை.இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள்,பைக் ரேசிங் எனும் விபரீத விளையாட்டை தற்போது கையில் எடுத்துள்ளனர். ஆல்டர் செய்யப்பட்ட பைக்குகளில், சைலென்சரை அலரவிட்டபடி அதிவேகமாக பைக்குகளில் குரூப் குரூப்பாக செல்கின்றனர். இதனால் நிம்மதியாக எங்களால் வீட்டை விட்டு சாலைகளில் நடந்து செல்லவே முடியவில்லை. எப்போதும் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டி இருக்கிறது.
குறிப்பாக,காலை மற்றும் மாலை வேலைகளில், மலைக்கோட்டையில் இருந்து 10க்கும் மேற்பட்ட பைக்குகளில் ஒரு குழுவும், திருச்சி தெப்பக்குளம் பகுதியில் இருந்து 7க்கும் மேற்பட்ட பைக்குகளில் ஒரு குழுவும் பைக் ரேசிங் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
நேற்று மாலை கூட சாலையில் நடந்து சென்ற முதியவர் மேல் இந்த ரேஸிங் பைக்குகள் மோதியதில் ஏழு தையல்கள் போடும் அளவுக்கு தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதே போல் தினமும் விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது பற்றி நாங்கள் காவல்துறையிடம் புகார் அளித்தாலும், அவர்கள் பைக்குகள் மீது அபராதம் விதிக்கின்றனர்.அதை இந்த பைக் ரேசிங் செய்யும் இளைஞர்கள் கண்டு கொள்வதே இல்லை. எனவே இதன் தீவிரத் தன்மையை உணர்ந்து, திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐ.பி.எஸ் பைக் ரேசிங் செய்யும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,திருச்சி மாநகராட்சி ஆணையர் வி.சரவணன் இப்பகுதியில் வேகத்தடைகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகர காவல் துறையும், மாநகராட்சி நிர்வாகமும் ஒன்றிணைந்து, இப்பகுதியில் பைக் ரேசிங் நடக்காதபடி உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நாமும் நம்புவோம்.
Comments are closed.