திருச்சி, துறையூரில் இறந்தவரின் உடலை தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவிப்பு: நகராட்சி ஆணையருடன் வாக்குவாதம்…!
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட நவீன தகனமேடை உள்ளது. இதனை தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பராமரித்து வந்த நிலையில் அதன் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதால் அதனை நகராட்சி வசம் மீண்டும் ஒப்படைத்தது. இந்தநிலையில் விபத்தில் இறந்த ஒருவரது உடலை தகனம் செய்வதற்காக இன்று(11-09-2024) தகன மேடைக்கு உறவினர்கள் எடுத்து வந்தனர். பின்னர், எரியூட்டுவதற்காக தகன மேடையில் வைத்த போது சடலம் கீழே விழுந்ததுடன் கதவுகள் சரியாக மூடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சடலம் சரி வர எரியாததால் உறவினர்கள் ஆத்திரமடைந்து அங்குள்ள பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களிடையே சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது இறந்தவரின் உடலை கூட நிம்மதியாக தகனம் செய்ய முடியாத சூழ்நிலை துறையூர் நகராட்சியில் நிலவுவதாகவும், தகனமேடையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள், நீண்ட நேரம் போராடி உடலை தகனம் செய்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Comments are closed.