திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய கும்பலை கைது செய்யக்கோரி வியாபாரிகள் மறியல் செய்ய முயற்சி…!
திருச்சி, வரகனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 53). இவர் காந்தி மார்க்கெட் மெயின் ரோடு பகுதியில் பழக்கடை மற்றும் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு 3 பேர் கொண்ட கும்பல் வந்து பழத்தை வாங்கிவிட்டு பணம் தராமல் அங்குள்ள ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அந்த ஊழியரை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த செல்வத்திடமும் அந்த கும்பல் தகராறு செய்து அவரையும் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அந்த கும்பல் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்தும், வியாபாரியை தாக்கிய அந்த கும்பலை உடனடியாக கைது செய்ய கோரியும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ஷபி அகமது, துணை பொருளாளர் சுதாகர் மற்றும் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன், வியாபாரிகள் எஸ்.கே.டி. பாண்டியன், மல்லி சேகர், பிரபாகரன் விஜயகுமார், மோகன் உள்ளிட்ட ஏராளமான வியாபாரிகள் அங்கு திரண்டு மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இதை அடுத்து காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை
நடத்தினார். வியாபாரியை தாக்கிய மர்ம கும்பலை கைது செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து வியாபாரிகள் போராட்டம் நடத்த இருந்ததை கைவிட்டனர். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. காந்தி மார்க்கெட் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும். காந்தி மார்க்கெட் பகுதியில் இரவு நேரத்தில் பிளாக்கில் மது விற்பதை தடுக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று கூறினார்.
Comments are closed.