திருச்சி கேம்பியன் பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா…* மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன..!
திருச்சி கேம்பியன் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், தொடக்கப்பள்ளி ஆண்டு விழா மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் முன்னிலை வகித்தார். மாண்ட்போர்ட் கபிரியேல் சபையின் திருச்சி மண்டலத் தலைவர் அருட்சகோதரர் ஜான் பிரிட்டோ தலைமை வகித்தார். டாக்டர் டேன் ஸ்ரீ டத்தோ பாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்ற விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. தொடர்ந்து 2025-26-ம் கல்வியாண்டில் சிறப்பிடம் பெற்ற தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

மேலும், மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர். விழாவில், சிறப்பு விருந்தினர் டாக்டர் டேன் ஸ்ரீ டத்தோ பாலன் பேசுகையில், எனது வெற்றியின் பயணம் கேம்பியன் பள்ளியில் இருந்து தொடங்கியது. ஆசிரியர்கள், ஒவ்வொரு மாணவருடைய வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களைப் போற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2025-26-ம் ஆண்டிற்கான தொடக்கப்பள்ளிமற்றும் மேல்நிலைப் பள்ளிக்கான ஆண்டறிக்கையை பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் வாசித்தார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இருந்தால் வாழ்வில் முன்னேறலாம். அதனால் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதோடு பெற்றோர்கள் கடமை முடிந்து விட்டது என்று எண்ணாமல் சோதனைகளைக் கடந்து சாதனைகள் புரிய குழந்தைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘புனித மாண்ட்போர்டின் பார்வையும், இலக்கும்’ எனும் தலைப்பில் மௌன நாடகத்தை மாணவர்கள் சிறப்பாக நடித்துக் காட்டினர். ‘தலைமை தாங்க நூல்களை வாசி’ எனும் தலைப்பிலான நடனம் காண்போரை சிந்திக்க வைத்தது. ‘சக்தி உனக்குள்’ என்ற தலைப்பில் தொடக்கப்பள்ளி மாணவர்களின் பிரம்மாண்டமான நிறைவு நடனம் காண்போரைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் ஆசிரியப் பெருமக்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.