நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் பக்கமுள்ள நகப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் வினித் விமல்ராஜ்(வயது 21). இவர், தனது கல்லூரி நண்பர்களான தர்மபுரியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ரகுமான் ஆகியோரை அழைத்துக்கொண்டு பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நகப்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்கச்சென்றார். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் வினித்விமல்ராஜ் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பார்த்தனர். அப்போது கரையோரம் 3 பேரின் செருப்புகள் மற்றும் செல்போன்கள் இருந்தன. ஆற்றில் தேடிப் பார்த்தனர். நீண்டநேரம் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் தீயணைப்புத்துறையினரும் வந்தனர். பின்னர் அனைவரும் மாயமான மாணவர்களை தீவிரமாக தேடினர். அப்போது ஆற்றில் 3 மாணவர்களையும் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். அவர்களது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே கல்லூரியில் படித்த நண்பர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.