தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மே நான்காம் தேதி வாக்குகள் எண்ண ப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனால், கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் (06-04-2026)நிறைவு பெறுகிறது. இதனால், இதுவரை தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் அலுவலகத்திற்கு படையெடுத்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான், போட்டியிடும் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகத்திற்கு சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேபோல, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று விருத்தாசலத்தில் கடலூர் ரோட்டில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஷ்ணு பிரியாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதேபோல ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அவிநாசி தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தி, தர்மபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சவுமியா அன்புமணி, விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதனால், தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை சமாளிக்க சில இடங்களில் ‘டோக்கன்’ நடைமுறை பின்பற்றப்படுகிறது.

Comments are closed.