திருச்சி, மணப்பாறை அருகே 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருமுக்தீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் – வீடியோ இணைப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து கோவில்பட்டி போகும் வழியில் 5 கிலோமீட்டர் தொலைவில் பூர்த்தி கோயில் என்கிற ஊரில் அமைந்துள்ளது, அந்தாள ஈஸ்வரி உடனுறை திருமுக்தீஸ்வரர் திருக்கோயில். ‘முருகனுக்கு ஆறுபடை வீடு, பெருமாளுக்கு 108 திவ்ய தேசம் சிறப்பு. அதேபோல், ஈசன் 1008 அவதாரங்கள் எடுத்து பலருக்கு காட்சி கொடுத்து பல திருவிளையாடல் நிகழ்த்தி இருக்கிறார். 1008- வது இடமாக இந்த இடத்தில் தன்னுடைய அவதாரங்களை பூர்த்தி செய்யும் விதமாக அவதரித்திருக்கிறார். இங்கே தான் அவர் முக்தி பெறுகிறார். அதனால் தான் இறைவனுக்கு முக்தீஸ்வரர் என்றும் இந்த ஊருக்கு பூர்த்தி கோயில் என்றும் பெயர் வந்தது. மூலஸ்தானத்தில் லிங்க வடிவில் அமைந்திருக்கிறார் ஈசன். தாயாருக்கு அந்தாள ஈஸ்வரி என்று பெயர் வந்ததும் அப்படித்தான். அந்தம் என்றால் முடிவு நிறைவு என்று பொருள். 1007 அவதாரங்களுக்கு பிறகு ஈசன் தன் அவதார நிறைவு செய்யும் இடம் என்பதால் இங்குள்ள இறைவனை யாரும் வழிபடுவது அவ்வளவு எளிதல்ல. இங்கே வரும் பக்தர்களும் மிகுந்த சிரமப்பட்டுதான் வர வேண்டி இருக்கும் என்பது கல்வெட்டுகளிலும் சொல்லியிருக்கும் விஷயம்.
‘தசரதன் இங்கே வழிபாடு செய்த பின்னர்தான் அவருக்கு திருமணம் நடந்தது. ராமர் லட்சுமணர் அவதாரங்களுக்கு முன்பே அமையப்பெற்ற கோயில் என்பதால் இங்கே நவக்கிரக அமைப்புகள் இல்லை வழிபாடு இல்லை என்பதும் நவகிரகங்களின் முழு சக்தியும் மூலவரிடமே இருப்பதும் சிறப்பு. நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் பைரவருக்கு இங்கே அதீத சக்தி உண்டு. மன்னர்களே இங்கே யாகம் வளர்த்து அஷ்டமி நேரத்தில் பைரவர் இடம் வணங்கி அருள் பெற்று போருக்கு கிளம்பி சென்றதெல்லாம் ஆவணங்களாக உள்ளது’ என்கிறார்கள் அங்குள்ள பெரியவர்கள். இந்தக் கோயில் 8000 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என்று சிலைகளை ஆராய்ச்சி செய்த தொல்பொருள் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
ஒன்பது மன்னர்கள் இந்த கோயிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார்கள். கோபுரத்தில் உள்ள கும்பம் கட்டப்பட்டிருக்கும் வடிவம் அதற்கு மேல் அமைக்கப்பட்டு இருக்கும் பூ வடிவம் எல்லாம் 300 வருடங்களுக்கு முந்தையது. அப்படியானால் இந்த கோயிலுக்கு திருப்பணி நடந்து 300 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று நாம் முடிவுக்கு வரலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் திருப்பணி செய்யப்பட்டு 12-07-2024 (வெள்ளிக்கிழமை) கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புறப்பட்டு கோவில் கோபுரங்களில் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் தொடர்பான ஏற்பாடுகளை வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் அன்பழகன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed.