தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்…!.(வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். தைப்பூச திருவிழா பிப்ரவரி 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் பூத வாகனம், மரஅன்ன வாகனம், மரரிஷப வாகனம், மரயானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 8-ம் நாளான நேற்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9-ம் நாள் திருவிழாவான இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் உற்சவர் மண்டபத்தில் இருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி ஊர்வலமாக தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார். தொடர்ந்து வாணவேடிக்கைகள் முழங்க இரவு 8.40 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர் மூன்று முறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் தெப்பத்தின் நான்கு புறங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நின்று அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து கடைவீதி, தேரோடும் வீதி வழியாக கோவிலை சென்றடைந்தார்.
10-ம் நாளான இன்று(11-02-2025) காலை தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வட திருகாவிரிக்கு வழிநடை உபயம் கண்டருள செல்கின்றார். மாலை அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதிகாலை மகா அபிஷேகமும், தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காலை முதல் இரவு வரை அம்மன் வழி நடை உபயம் கண்டருளி மண்டகப்படி கண்டருளுகிறார். இரவு 11 மணிக்கு கோவிலை வந்தடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பிரகாஷ், மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed.