வணிக வரித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்…* திருச்சியில் நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்!
தமிழ்நாடு உதவி ஆணையர் வணிகவரி அலுவலர், துணை வணிகவரி அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அஜந்தா ஹோட்டலில் இன்று( டிச.20) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.லட்சுமணன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் என். ஜனார்த்தனன், மாநில பொருளாளர் டி.விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி கோட்டத் தலைவர் ஆர்.பொன்னுசாமி வரவேற்று பேசினார். தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநில தலைவர் கே.லட்சுமணன் கூறுகையில், தமிழக அரசுக்கு 80% சதவீதத்திற்கு மேல் வருவாய் ஈட்டித்தரும் வணிக வரித்துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முதுநிலை பணியை உயர்வு பிரச்சினை என்பது தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. ஆகவே இவ்வழக்கை சுமூகமாக முடித்து பதவி உயர்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். வணிக வரித்துறையில் சுமார் 50 சதவிகிதத்திற்கும் மேலான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஒரே அலுவலர் இரண்டிற்கும் மேற்பட்ட இடங்களில் பணியாற்றும் சூழல் உருவாகிறது. ஆகவே பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். எங்கள் கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைக்க இருக்கிறோம். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூறினார். இக்கூட்டத்தில் முதுநிலை பணி உயர்வு பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி ஜனவரி 7ம் தேதி வணிகவரித்துறை தலைமையகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவது. ஜனவரி 27ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட அலுவலகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிவது அல்லது ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஜனவரி 30ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கோட்டப் பொருளாளர் கே.ராமச்சந்திரன் நன்றி கூறினார். கூட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.