Rock Fort Times
Online News

53 ஆண்டுகளாக லட்சக்கணக்கான பயணிகளை கையாண்ட திருச்சி மத்திய பேருந்து நிலையம் விடை பெற்றது…!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 1966-ம் ஆண்டு திருச்சி நகராட்சியாக இருந்த போது மத்திய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டப்பட்டு 1972 -ம் ஆண்டு பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பேருந்து நிலையம் தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் எந்த மாவட்டத்தில் இருந்து வந்தாலும் குறைந்தபட்சம் 5 மணி நேரத்தில் வந்துவிடலாம். இதனால் தான் அரசியல்வாதிகள் தங்களது கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை திருச்சியில் நடத்த முடிவு செய்கின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தந்து தங்களது இருப்பிடங்களுக்கு சென்று வந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இரவு பகல் பாராது எந்த நேரமும் கூட்டம் அலைமோதும். இந்நிலையில்
வாகனப்பெருக்கம், மக்கள் தொகை பெருக்கத்தால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. 2002 ம் ஆண்டு 5.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பாதுகாப்புத் துறையிடமிருந்து நிலம் பெற்று மத்திய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்த பொழுதும் மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்பட்டது. சாலைகளில் நிறைய பேருந்துகள் நிற்பதன் மூலமும் வார இறுதி நாட்களில் பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாகவும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் திருச்சி-மதுரை சாலை அருகே உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைக்க முன் வந்தது. இதற்காக அங்கு 401 பேருந்துகளை கையாளும் வகையில் மிக பிரம்மாண்டமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையத்தை கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் கடைகள் ஏலம், பஸ்கள் ரூட் போன்ற காரணங்களால் போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது அந்தப் பணிகளும் முடிக்கப்பட்டு அமைச்சர் கே.என் நேருவால் புதிய பேருந்து முனையத்திலிருந்து இன்று( ஜூலை 16) பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டன. இதன்மூலம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட புறநகர் பேருந்துகள் இனி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகள் நிற்கும் இடம் வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் இதேபோல மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. 53 ஆண்டு காலமாக லட்சக்கணக்கான பயணிகளை கையாண்ட மத்திய பேருந்து நிலையம் தற்போது விடை பெற்றுள்ளது. ஆனால், சிட்டி பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பேருந்து நிலையத்தின் உள்ளே வணிக வளாகம் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்