தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் 27ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மேகநாதனும் ஒருவர்.இவர் அப்பகுதியை சேர்ந்த 34 பேருடன் மாநாட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மாநாடு முடிந்த பின் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.மனுவில் கூறப்பட்டிருப்பதாவது., நான் திருத்துறைப்பூண்டி பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு மேகநாதன் என்ற மகனும், அனுசியா என்ற மகளும் உள்ளனர். மேகநாதன் ஐடிஐ முடித்துவிட்டு டிவி மெக்கானிக் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த விஜய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மேகநாதன் சென்றார். மாநாடு முடிந்த பின் என் மகனை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. காணாமல் போன எனது மகனை கண்டுபிடித்து தருமாறு விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் அவர்கள் வழக்கு பதிவு செய்தனர். எனினும் என் மகனை கண்டுபிடிக்க சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எனது மகன் மேகநாதன் கண்டுபிடித்து தர உதவ வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அம்மனுவை உயர்நீதிமன்றம் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் பேரில் விக்கிரவாண்டி போலீசார் காணாமல் போன மேகநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments are closed.