ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…!
ரூ.20 ஆயிரம் கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் டெண்டர் கோரி உள்ளது.
மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், மின் இழப்பைத் தடுக்கவும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி 2026 ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறைவேற்றவும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.20 ஆயிரம் கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் டெண்டர் கோரி உள்ளது. இதன்படி ரூ.19,992 கோடி செலவில் 3 கோடியே 4 லட்சத்து,86 ஆயிரத்து 617 ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. குறிப்பாக, சென்னை, வேலூர் மண்டலத்தில் 49.43 லட்சம், கோவை, ஈரோடு மண்டலத்தில் 56.74 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், காஞ்சிபுரம், விழுப்புரம் மண்டலங்களில் 49.61 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், கரூர், நெல்லை மண்டலங்களில் 49.98 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், திருச்சி, தஞ்சாவூர் மண்டலங்களில் 49.86 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், மதுரை, திருவண்ணாமலை மண்டலங்களில் 49.77 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும் பொருத்தப்பட உள்ளது. 6 கட்டமாக நிறுவப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின் வாரியம். ஏற்கனவே 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி குழுமத்துடனான டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் டெண்டர் தொடர்பான நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் பணிகள் தொடங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.