திருச்சி, புத்தூர் நால்ரோட்டில் இருந்து இரட்டை வாய்க்கால் வரை குண்டும்-குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்- * மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் வலியுறுத்தல்!
திருச்சி, வயலூர் ரோடு, புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் எஸ்.வி. முருகேசன், செயலாளர் ஆர்.காளிமுத்து, பொருளாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் தெரிவித்து இருப்பதாவது:-
கடந்த 2 வருடமாக திருச்சி, புத்தூர் நான்கு ரோட்டில் இருந்து இரட்டை வாய்க்கால் வரை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பணி நடைபெற்றதால் ரோடு குண்டும்- குழியுமாக உள்ளது. இது சம்பந்தமாக கடந்த 2 வருடத்திற்கு முன்பாகவே, தார்சாலை அமைத்து தருமாறு அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் புத்தூர், பாரதிநகர், குமரன் நகர், சீனிவாசநகர், ராமலிங்க நகர், அம்மையப்ப நகர், கீதாநகர், சண்முகா நகர், உய்யக்கொண்டான் திருமலை, இரட்டை வாய்க்கால் பொதுமக்கள் அனைவரும் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்தோம். அத்துடன் உள்ளாட்சி துறை அமைச்சர், அன்றைய மாநகராட்சி ஆணையர், மேயர் என அனைவரிடமும் முறைப்படி மனு அளித்தோம். அதன் அடிப்படையில் அப்போது தற்காலிகமாக சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் பாதாளசாக்கடை பணிகள் ஆரம்பித்ததால் பிஷப் ஹிபர் கல்லூரி, சீனிவாசநகர் ஓம்சக்தி கோவில் அருகில் மற்றும் ஒரு சில இடங்களில் ரோடு படுமோசமாக இருக்கிறது. இதுவரை இந்த வயலூர் சாலையில் பத்திற்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு வயலூர் சாலையை உடனடியாக சீரமைத்து விபத்துகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Comments are closed.