Rock Fort Times
Online News

தமிழகத்தில் அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு…!

தமிழகத்தில்  கடந்த 32 நாட்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று (17-04-2024) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றன.  இந்த முறை திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும், பாரதிய ஜனதா தலைமையில் இன்னொரு கூட்டணியும் அமைத்து போட்டியிடுகின்றன.  சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து களம் காண்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிவாகை சூடியது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த முறை தமிழகத்தில் உள்ள  39 தொகுதிகளையும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது அசுர பலத்தை நிரூபிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதேபோல, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவும் இந்த முறை கணிசமான இடங்களில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு பக்கபலமாக பிரேமலதா விஜயகாந்த்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.  மற்ற கட்சியினருக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல  பாரதிய ஜனதா கட்சியினரும் தீவிர களப்பணி ஆற்றினர்.

பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், கட்சியின் அகில இந்திய தலைவர்  ஜே பி நட்டா மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமானும் 40 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.  இதனால், தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதால் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. முன்னதாக இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான இடங்களில் வாகன பேரணி நடத்தினர்.  நாளை ஓய்வு தினமாகும். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது.  ஜூன் மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்