திருச்சி, மணிகண்டம் அருகேயுள்ள மேக்குடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாய்பாபாவை வணங்கி வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று ( ஜூலை -3 )நள்ளிரவு மேக்குடி சாய்பாபா கோவில் மெயில் ஐடிக்கு., வியாழக்கிழமை பெரிய அளவில் வெடிகுண்டு வெடிக்கும் என மெயில் வந்துள்ளது.இதைப் பார்த்து பதற்றமான கோயில் நிர்வாகத்தினர், உடனடியாக மணிகண்டம் காவல் நிலையத்திற்கு
தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மெட்டல் டிடக்டருடன் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் பொன்னியும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கோவில் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. முடிவில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.
வழக்கமாக ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று, மேக்குடி சாய்பாபா கோவிலுக்கு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்வது வழக்கம். அதன்படி இந்த வியாழக்கிழமை சாய்பாபா கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும் கோவில் நிர்வாகத்திலும் கோவிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பதட்டமும், பீதியும் அடைந்தனர். இறுதியில் அது புரளி என தெரிந்தபிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.போலீசார் வெடிகுண்டு மிரட்டல் வந்த மெயில் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.