சட்டவிதிகளை மீறும் வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் துணை நிற்கக் கூடாது…
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் பேச்சு...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 46வது ஆண்டு விழா நேற்று (08.09.2023) நடைபெற்றது. விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் பேசியதாவது:-
சிவில், குற்றவியல், மாவட்டம், தாலுகா, பெண் வழக்கறிஞர்கள் சங்கம் என வழக்கறிஞர்களுக்காக பல்வேறு சங்கங்கள் இருக்கலாம். அந்தந்த துறை, பகுதிகளுக்காக பிரத்யேகமாக இந்த சங்கங்கள் உள்ளன. ஆனால், வழக்கறிஞர் சமுதாயம் என்றால் ஒன்றுதான் என அனைத்து சங்கங்களுமே ஒற்றுமையுடன், ஒரே குரலில் ஒலித்தால் மட்டுமே தங்களது உரிமைகளை பெற முடியும். போலி வழக்கறிஞர்களை கண்டறிந்து அவர்களது பதிவை ரத்து செய்வதை போன்று, விதிகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சொத்துக்களை ஆக்கிரமித்தல், ரவுடியிசம், சட்ட விதிகளை மீறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் துணை நிற்கக் கூடாது. 5 சதவீத வழக்கறிஞர்கள் தவறு செய்தால் 95 சதவீத வழக்கறிஞர்களுக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும்.
எனவே, இளம் வழக்கறிஞர்களை வழிநடத்துவதிலும், தவறு செய்யும் வழக்கறிஞர்களை தண்டிப்பதிலும் பார் கவுன்சில் உறுதியாக இருக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் முதலில் நானும் ஒரு வழக்கறிஞர். எனவே, எப்போதும் வழக்கறிஞர்களுக்கான உரிமைக்கு துணை நிற்பேன். அதே நேரத்தில் விதிகளை மீறினால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. டிஜிட்டல் மயம், ஆன்-லைன் நடவடிக்கைகளால் வழக்கறிஞர்களுக்கு வருங்காலம் பெரிதும் சவாலாக இருக்கும். எனவே, தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இளம் வழக்கறிஞர்களுக்கு நடுவர் நீதிமன்றங்கள்தான் கற்பதற்கான களமாகும். எனவே, அத்தகைய நீதிமன்றங்களில் வரும் ஒவ்வொரு மனுக்கள் மற்றும் வழக்குகளையும் கவனமாக கற்றுக் கொள்ள வேண்டும். எந்த வழக்காக இருந்தாலும் அதன் உண்மை தன்மையை அறிந்து, அந்த உண்மையின் பக்கம் நின்று வாதிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
உயர்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கர் பேசுகையில், போக்ஸோ வழக்குகளில் முத்தரப்பும் முறையாக செயல்பட வேண்டும். அரசு தரப்பு, எதிர் தரப்பு, நீதிமன்றம் என முத்தரப்பும் கவனமாக இருந்தால் தவறு செய்யாத நபர்கள் தண்டிக்கப்படும் நிலை இருக்காது. வழக்குப்பதிவு செய்து பின்னர் குற்றமற்றவர் என விடுதலையானால், மீண்டும் அவர் இழந்தவற்றை பெற முடியாது. குறிப்பாக இளம் வழக்கறிஞர்கள் மூத்தவர்களின் அனுபவங்களை நேரடியாக பெற்று பணிபுரிய வேண்டும். மருத்துவமும், சட்டமும் தினந்தோறும் கற்றுக் கொள்ள வேண்டிய தொழிலாக உள்ளது. வேறு எந்த தொழிலுக்கும் இல்லாத புனிதம் இந்த தொழில்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து வழக்கறிஞர்கள் தங்களது பணிகளை பிறருக்கு முன் உதாரணமாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த விழாவில், திருச்சி மாவட்டத்துக்கான அலுவல் நீதிபதியாக உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். ஸ்ரீமதி, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ், துணைத் தலைவர் வி.கார்த்திகேயன், இணைத் தலைவர் என். மாரப்பன், நிர்வாகக் குழு தலைவர் ஜே. பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 60 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு திருச்சிக்கு பெருமை சேர்த்துள்ள மூத்த , வழக்கறிஞர் ஸ்டேனிஸ்லாஸ், உயர்நீதிமன்ற நீதிபதிகளால் கெளரவிக்கப்பட்டு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி. சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், பொருளாளர் எஸ்.ஆர். கிஷோர் குமார் மற்றும் நடுவர் மன்ற நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், நகர வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.