தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக முத்துக்குமார் (40) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், மார்ச் 27ம் தேதி பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் மது அருந்திக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்பவரிடம் இனி கஞ்சா விற்க வேண்டாம் என முத்துக்குமார் அறிவுரை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்கள் இருவர்இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்த முத்துக்குமார், கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சிலர், பின்னால் வந்து முத்துக்குமாரை கல்லால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சட்டமன்றம் வரை சென்றது. இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணையை ரிதப்படுத்தினர்.
இதையடுத்து போலீஸ்காரர் முத்துக்குமாரை கல்லால் அடித்து கொலை செய்தது கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் அவர் காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கி இருந்தார். போலீசாரின் தீவிர வேட்டையில், அவர் தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்ய போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கைது செய்ய சென்ற போலீசாரை பொன்வண்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உசிலம்பட்டி நகர ஆய்வாளர் ஆனந்தன், பொன்வண்ணணை என்கவுன்ட்டர் செய்தார். இதில் படுகாயம் அடைந்த பொன்வண்ணன் மற்றும் அவரால் வெட்டப்பட்ட ஏட்டு சுந்தர பாண்டியன் ஆகிய இரண்டு பேரையும் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து பொன்வண்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரரை கொலை செய்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணனை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டு பிடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.