திருச்சி மாநகர பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க கொடுக்கப்பட்ட டெண்டர் ரத்து…
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் அறிவிப்பு...
திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையிலும், துணைமேயர் திவ்யா, ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலையில் இன்று ( 31.10.2023 ) நடைபெற்றது. கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், துர்காதேவி , ஜெயநிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
ஜவகர் (காங்கிரஸ்): ஸ்ரீரங்கத்தில் பஸ் நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
முத்து செல்வம் (திமுக): திருச்சி மாநகரில் மாடுகளை பிடிப்பதற்கு கொடுக்கப்பட்ட டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மேயர் அன்பழகன்: திருச்சி மாநகரில் மாடுகளை பிடிப்பதற்காக விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராமதாஸ் (திமுக): மாநகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்க ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கூடுதலாக பணியாளர்களைக் கொண்டு கொசு மருந்து அடிக்க வேண்டும் .
எல்.ஐ.சி.சங்கர் ( திமுக): திருச்சி மேலப்புலிவார்டு ரோடு பகுதியில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரிவர எரியவில்லை.
ஜாபர் அலி ( திமுக): – திருச்சி ஜே.கே. நகர் பகுதியில் மழை நீர் வடிகால் பாதிக்கட்டியும், பாதி கட்டப்படாமலும் உள்ளது. அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கோ.கு.அம்பிகாபதி (அதிமுக): திருச்சி வயர்லஸ் ரோடு சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக எனது வார்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் மேம்பாலத்திற்கு கீழ் கம்பி வேலி அமைத்து அந்த பகுதி அழகு படுத்தும் பணி நடந்து வருகிறது. கம்பி வேலி மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே மக்களை பாதிக்காத வகையில் அந்த பகுதியில் தடுப்பு அமைத்து அழகுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் .மேலும் செம்பட்டு சுடுகாட்டை மாநகராட்சி கையகப்படுத்த வேண்டும். பசுமை நகரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

எல்.ரெக்ஸ் (காங்): திருச்சி பால்பண்ணை – துவாக்குடி சர்வீஸ் ரோடு திட்டப்பணிகள் தாமதமாகி வருவதால் கைலாஷ் நகர், காட்டூர், எஸ்.ஐ.டி.பகுதிகளில் ராமகிருஷ்ணா மேம்பாலம் போன்று சிறு பாலங்கள் அமைத்து அப்பகுதி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர்: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கும் நீங்கள் உங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாக நெடுஞ்சாலைத்துறைக்கு அழுத்தம் கொடுத்து வலியுறுத்தங்கள்.
எல்.ரெக்ஸ் (காங்): நாங்களும் கோரிக்கை விடுத்து தான் வருகிறோம். நீங்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பொதுமக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்.
கமால் முஸ்தபா ( திமுக): திருச்சி 30 வது வார்டு பாலக்கரை பகுதியில் மழை பெய்யும் போது மழை நீர் தென்னூர் ஆழ்வார் தோப்பு வந்து அண்ணா நகர் (ஓ பாலம்) வழியாக தெருவுக்குள் புகுந்து விடுகிறது. எனவே ரயில்வே அனுமதி பெற்று மழைநீர் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஞ்சுளாதேவி பாலசுப்ரமணியன் (திமுக): மாந்தோப்பு சாலையில் ஓராண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட சுகாதார மையம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.
மேயர்;- திருச்சி மாநகராட்சியில் 11 நகர்ப்புற சுகாதார நிலையங்களை விரைவில் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பைஸ் அகமது (ம.ம.க): திருச்சி பாலக்கரை, மரக்கடை, பேலஸ் தியேட்டர் பகுதிகளில் இருந்து மழைநீர் எனது வார்டு பகுதிக்குள் வந்து சேர்வதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மழை நீர் செல்வதற்கு தனி கால்வாய் அமைக்க வேண்டும். மேலும் வார்டு பகுதியில் குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
முத்துச்செல்வம்( திமுக,): மாநகராட்சி விளம்பர அறிவிப்பில் கொல்லாங்குளம் ஏரி மற்றும் எடமலைப்பட்டி புதூர் ஏரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எடமலைப்பட்டி புதூரில் ஏரி எங்கு இருக்கிறதுஎன்று வார்டு மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
மேயர் : இது அச்சடிப்பதில் ஏற்பட்ட தவறு. வேறு ஒன்றும் இல்லை இவ்வாறு விவாதம் நடந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.