Rock Fort Times
Online News

மருந்து, மாத்திரைகளை எரித்தபோது உடலில் தீப்பிடித்த வாலிபர் பலி…. உறவினர்கள் போராட்டம்..

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 28). இவர், மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராகவும், கே. பெரியபட்டி ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராகவும் வேலை பார்த்து வந்தார். அவரை கடந்த மாதம் 26ம் தேதி மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரச் சொல்லி உள்ளனர். அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருந்து, மாத்திரைகளை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று ( 30.06.2023 )பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கலையரசனின் உறவினர்கள் மற்றும் தமிழ்நாடு டெங்கு கொசு ஒழிப்பு முன் களப்பணியாளர் சங்கத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வன், போலீஸ் உதவி கமிஷனர் ராஜு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கலையரசன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்