இந்திய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று ( 06.10.2023 ) நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இந்த தொகுதியில் குடிநீர் பஞ்சம் இருந்தது. அதை தீர்த்து வைத்தேன். மேலும் எனது தொகுதியை சேர்ந்த 1,200 பேருக்கு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் இலவச கல்வி அளித்து இருக்கிறேன். எனது தொகுதியில் 4 ஆண்டு காலத்தில் என்னென்ன செய்ய முடியுமோ? அத்தனையும் செய்து, ஒரு மன நிறைவோடு 5 ஆண்டுகளையும் நிறைவு செய்ய உள்ளேன். தொகுதி மக்களில் 50 ஆண்டு கால கனவான, அரியலூரில் இருந்து நாமக்கலுக்கு ரெயில்பாதை கோரிக்கையை மத்திய ரெயில்வே மத்திரியிடம் எடுத்து சென்றேன். தற்போது, ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு தொகுதிக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.25 கோடி மத்திய அரசு கொடுக்கும். கொரோனா காரணமாக, ரூ.17 கோடியே 10 லட்சம் தான் வந்தது. அந்த நிதியில் அதிகமாக பள்ளிகளுக்கு வகுப்பறை, கழிவறை கட்டவும், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் பயன்படுத்தி உள்ளேன். இதுவரை எனக்கு கொடுக்கப்பட்ட தொகையை ஒரு பைசா கூட வீணடிக்கவில்லை.அத்தனையும் தொகுதி மக்களின் வளர்ச்சி பணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பணம் மக்களுக்கு என்ற அடிப்படையில் எந்த ஒரு கமிஷனும் இன்றி வெளிப்படையாக வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நான் அடிப்படையில் ஒரு தேசியவாதி. பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் தான் இருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தொகுதியை கேட்டு பெறுவோம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் 50 ஆண்டுகால கனவான அரியலூர்-நாமக்கல் ரெயில்வே வழித்தடத்தை நிறைவேற்றிவிடுவேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இருந்தாலும், இல்லா விட்டாலும் நாங்கள் அந்த கூட்டணி தான் இருப்போம். அடுத்த முறையும் மோடி தான் பிரதமராக வருவார். நடிகர் விஜய் போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். பெரம்பலூர் தொகுதியை பொருத்தவரை தமிழக அரசு இன்னும் அக்கறை எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. நிறைய சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. கிராம சாலைகள் சரியில்லை.
தமிழக அரசு எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். பெண்கள் பள்ளியில் வகுப்பறை இல்லை. மரத்தடியில் தான் வகுப்புகள் நடக்கின்றன. இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. காவல்துறை சுதந்திரமாக இல்லை. மகளிர் உரிமைத் தொகை 50 சதவீதம் பேருக்கு வழங்கி 50 சதவீதம் பேருக்கு வழங்கவில்லை என்றால், கிடைக்காதவர்கள் அவர்களுக்கு எதிரான மனநிலையில் தான் இருப்பார்கள். இவ்வாறு பாரிவேந்தர் எம்.பி. கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.