Rock Fort Times
Online News

மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய சப்- இன்ஸ்பெக்டர் கைது…!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தருவதாகவும், குண்டர் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என விபச்சார தடுப்பு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ரமா கேட்டுள்ளார். அதற்கு அஜிதா, தற்போது மசாஜ் சென்டர் நடத்த இயலாததால் தன்னால் ரூ.10 ஆயிரம் தர முடியாது என்று கேட்டுக் கொண்டதன்பேரில், அட்வான்சாக ரூ.3000 கொடுத்தால் மட்டுமே உனது வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தர முடியும் என்று ரமா கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா, இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் இன்று அஜிதாவிடம் இருந்து லஞ்சப்பணம் ரூ.3 ஆயிரத்தை ரமா பெற்றபோது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். திருச்சி மாநகரத்தை பொருத்தவரையில் 60 மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது என்றும், ஒரு மசாஜ் சென்டருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ரமாவின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்