ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தால் கடும் நடவடிக்கை… * தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை!
தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் முடிந்துள்ளன. நாளை( மார்ச் 28) எஸ்எஸ்எல்சி தேர்வுகள் தொடங்குகிறது. மேலும் ஒன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 08 முதல் 24ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், இறுதித் தேர்வு வினாத்தாள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில், கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெற்றபோது ஒரு சில மாவட்டங்களில் வினாத்தாள்கள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக விடைக் குறிப்புகளுடன் சமூக ஊடகத்தில் ஆசிரியர்களின் வழியாக பொதுவெளியில் பரவியது கண்டறியப்பட்டு அந்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஏப்ரல் 08 முதல் 24ம் வரை நடைபெற உள்ள ஆண்டு இறுதி தேர்வுகளின் போது நடுநிலைப் பள்ளிகளில் தேர்வுக்குரிய வினாத்தாள்களை பள்ளியின் EMIS உள்நுழைவின் வழியாக சென்று பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும்போதும், தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான வினாத்தாள்களை மாவட்டக் கல்வி அலுவலகம் வாயிலாக EMIS உள்நுழைவில் இருந்து பதிவிறக்கம் செய்து மாணவர் எண்ணிக்கை, பள்ளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிகள் எடுக்கும்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாக வெளியாகாத வகையில் செயல்பட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இனிவரும் காலங்களில் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானால் வெளியிடப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள் அவ்வொன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டக் கல்வி அலுவலர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, ஆண்டு இறுதித் தேர்வினை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் முடித்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.