வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை நிறுத்த வேண்டும்-மாநகராட்சி ஆணையரிடம் வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தல்…!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல், பொருளாளர் இஸ்மாயில் சேட்,மாநில இணைச் செயலாளர் மாரி என்கிற பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது;- ஆன்லைன் வர்த்தகம் மற்றும் தெரு சந்தைகள் என பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே நாங்கள் தொழில் வரி, சேவை வரி, வருமான வரி, உணவு பாதுகாப்பு வரி, விற்பனை வரி மற்றும் பல்வேறு வரிகளை மாநகராட்சிக்கும், அரசாங்கத்திற்கும் செலுத்தி வருகிறோம். எங்களது தொழில் நசிந்து வரும் நிலையில் சூப்பர் மார்க்கெட் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தவிர சில்லரை வணிகங்களுக்கு வருடம் ரூ.500 மட்டுமே வரி நிர்ணயித்து வசூலிக்க வேண்டுகிறோம். ஆனால், புதிதாக வரி கட்டுபவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து டி அண்ட் ஓ வரியும், அபராத வரியும் தொழில் செய்யும் இடத்திற்கு தகுந்தாற்போல் தங்களது அதிகாரிகள் சமீப காலமாக நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனவே, இந்த பிரச்சனை குறித்து தாங்கள் தலையிட்டு தக்க தீர்வை காண வேண்டும். மேலும், திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கனி வணிகம் செய்யும் வணிகர்கள் மார்க்கெட் மாற்றப்படுமா? இல்லையா? என்று பயந்து கொண்டு தொழில் செய்கின்றனர். ஆகவே, மாநகராட்சியால் காந்தி மார்க்கெட்டில் நிரந்தரக் கடைகளுக்கான உரிமையாளர்களின் பெயர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது . இந்த சூழ்நிலையில் தொழில்வரியும், உணவு பாதுகாப்பு துறைக்கான வரியும் டி அண்டு ஓ வரியும் செலுத்துவது சிரமமாக உள்ளது.
எனவே, இந்த வரிகளை எங்களின் மேல் சுமத்தக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனு அளித்தபோது மாநில துணைத்தலைவர் சாகுல் ஹமீது, மாநில இணைச்செயலாளர் சபி முகமது, மாவட்ட துணைத் தலைவர்கள் முஸ்தபா ,ரங்கராஜ் ,
சிவசாமி ,மாவட்ட பிரதிநிதிகள் குமார், அப்துல்லா,மோகன் மற்றும் திரளான வியாபாரிகள் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.