Rock Fort Times
Online News

தை தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சமீபத்தில் நடந்தது. அதனைத்தொடர்ந்து தை தேரோட்ட விழாவை முன்னிட்டு தெற்கு உத்திரை வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று(14-01-2024) காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் வைக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர். இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், வெங்கடேசன்
மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தைத்தேரோட்ட திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

நாளை(15-01-2024) காலை 4.45 மணி முதல் காலை 5.45 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தைத்தேர் திருவிழா 16-ந்தேதி துவங்கி வருகிற 26-ந்தேதி வரை 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது. 17-ந்தேதி காலை நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும் வீதியுலா வருகிறார். 18-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 19-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும் மாலை கருட வாகனத்திலும், 20-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 21-ந்தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 22-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 23-ந்தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 24-ந்தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு காலை 5 மணிக்கு வருகிறார். காலை 5.15 மணிமுதல் காலை 6 மணிவரை ரதரோஹணம்(மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 25-ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 26-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்