Rock Fort Times
Online News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்சி, கன்னியாகுமரி, பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பெங்களூரு, கன்னியாகுமரி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புனித பண்டிகையான ரமலானை இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டில் மார்ச் 31-ந் தேதி கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, சென்னையில் உள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதற்கான ரெயில் முன்பதிவு கடந்த மாதமே முடிந்து விட்டது. இந்நிலையில் சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்கவும் சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்; (வண்டி எண்; 06037 ) தாம்பரத்தில் இருந்து மார்ச் 28 ஆம் தேதி மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு மார்ச் 31 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல தாம்பரம் – திருச்சி இடையே, மார்ச் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.40 மணிக்கு திருச்சி வந்தடையும். அதேபோல மறுமார்க்கத்தில் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு 12.30 மணிக்கு போய் சேரும். இந்த ரயில் தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பத்தூர், புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல் மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 28 ஆம் தேதி காலை 8.05 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 07319), அதேநாளில் பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். சென்னை சென்ட்ரலில் இருந்து அதே நாளில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 10.50 மணிக்கு பெங்களூர் சென்றடையும். இந்த ரயில் கே.எஸ்.ஆர் பெங்களூர், யெஸ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்கராபேட், ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, சோழிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்