கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை, ஜெபம், மன்றாட்டு, குருத்தோலை ஞாயிறு மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன. நேற்று பெரிய வியாழனை முன்னிட்டு திருப்பலி மற்றும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்று (ஏப்ரல் 3) புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அவரது சிலுவை மரணத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள புனித லூர்து
அன்னை ஆலயம், புனித செபஸ்தியார் ஆலயம், பாலக்கரை சகாய மாதா பசிலிக்கா, மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயம், புத்தூர் பாத்திமா அன்னை ஆலயம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலயம், பொன்மலை சூசையப்பர் ஆலயம் உட்பட திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள்
ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். வெயில் அதிகமாக இருப்பதால் பக்தர்களின் நலன் கருதி ஆலயங்களில் நீர்மோர், பானகம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இன்று மாலை திருப்பலியும், சிலுவைப் பாதையும், நிறைவேற்றப்படுகிறது. நாளை சனிக்கிழமை இரவு திருப்பலியும், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

Comments are closed.