Rock Fort Times
Online News

திருச்சியில் மதுவுக்கு அடிமையான மகன்- “செத்தால் கூட எனக்கு நிம்மதி தான்” -தாய், வைரலாகும் வீடியோ…!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடக்கும் இந்த மதுபான கடைகளில் மது பிரியர்கள் மது அருந்தி வருகின்றனர். அரசு மதுபான கடைகளில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தை கவனிக்காமலும், வேலைக்கு செல்லாமலும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் திருச்சியில் அரங்கேறி இருக்கிறது. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கணவனை இழந்த ஒரு பெண் தனது மகனுடன் வசித்து வருகிறார். அந்த பெண் அல்லிமால் தெருவில் உள்ள ஒரு பிரிண்டிங் கம்பெனியில் தினமும் 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கடந்த இரண்டு வருடமாக மதுவிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அவர் வேலைக்கு செல்லாமல் தாயிடம் தொந்தரவு செய்து பணத்தை வாங்கி குடித்து வருகிறார். தனது மகனை திருத்த அந்த தாய் எவ்வளவோ போராடியும் பலன் அளிக்கவில்லை. சம்பள பணம் முழுவதையும் பிடுங்கி சென்று மது அருந்தி வந்ததால் வேதனையின் உச்சத்துக்கு சென்ற அந்த தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவசர போலீஸ் எண் 100- ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் அந்த வீட்டுக்கு சென்று அந்த வாலிபரிடம் அறிவுரை கூறியுள்ளனர். ஆனாலும் அவர் அதை கேட்காமல் தினமும் தாயை தொந்தரவு செய்து வருவதாக கண்ணீர் மல்க அந்த பெண் தெரிவிக்கிறார். தினக்கூலிக்கு செல்லும் நான் வீட்டு வாடகை கட்டுவேனா உனக்கு மது குடிக்க பணம் தருவேனா நீ செத்தால் கூட எனக்கு நிம்மதி தான் என வேதனையுடன் மகனிடம் கண்ணீர் மல்க பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கல்நெஞ்சம் படைத்தவர்களையும் கரைய வைப்பதாக உள்ளது. தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஒரு சில கடைகள் மட்டும் அகற்றப்பட்டது. ஆனால், பெரும்பாலான கடைகள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல இளைஞர்கள் மதுவினால் சீரழிந்து வருகின்றனர். ஆகவே, மதுக்கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்