பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள சறுக்கல் திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது: திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக்…!
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் இன்று(11-09-2024) நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், ராஜா ஹூசேன், நஜ்மாபேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும், அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது; வக்ஃப் சொத்துக்கள் பொதுச் சொத்துகள் அல்ல; அவை மசூதிகள், மதரஸாக்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு மத நோக்கங்களுக்காக அர்ப்பணிப்புள்ள முஸ்லிம்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்கள். வக்ஃப் வாரியம் மற்றும் வக்ஃப் சொத்துக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் வக்ஃப் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மேலும், இந்த சட்டத்தை திருத்துவதற்கான தற்போதைய நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் தன்னிச்சையானது. இயற்கையாகவே, வக்பு சொத்துக்களின் பாதுகாவலர்களாகவும், அதனை நிர்வகிக்கும் உரிமை உள்ளவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள். ஆனால், சர்ச்சைக்குரிய திருத்த மசோதா முஸ்லிம் அல்லாதவர்களை வக்பு வாரியங்களில் சேர்க்க முன்மொழிகிறது. இந்த திருத்த மசோதாவில் இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் மிக மோசமானவை. பாஜக அரசின் இந்த பிற்போக்கு நடவடிக்கையை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிப்பதோடு அதனை திரும்ப பெற வேண்டும். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மையினர் வெறுப்பு பிரச்சாரங்கள் பாஜக உள்ளிட்ட வகுப்புவாத கட்சிகளின் வழக்கமான அரசியலாக மாறியுள்ளது. ஆகவே, நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள், கண்ணியம் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். தமிழக அரசுப் பள்ளிகளில் மத அடிப்படையிலான, சமூகநீதி கருத்துக்களுக்கு எதிரான மற்றும் பிற்போக்கான கருத்துக்களை திணிக்கும் வகையிலான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தங்களை திராவிட மாடல் என்றும், சனாதனத்தை எதிர்ப்பவர்கள் என்றும், சமூக நீதியின் காவலர்கள் என்றும் பேசிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் ஆட்சியில் தான் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தொடர்ச்சியாக அவலங்கள் நடந்து வருகின்றன. புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை செயல்படுத்துவதாகட்டும், ஒன்றிய அரசின் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை செயல்படுத்துவதாகட்டும், கல்வி தொலைக்காட்சிக்கு ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட ஒருவரை சி.இ.ஓ வாக நியமிக்கும் நடவடிக்கையாக இருக்கட்டும், விநாயகர் சதுர்த்தி எப்படி கொண்டாட வேண்டும் என்கிற சுற்றறிக்கையாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் மாநில அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான செயல்பாடுகளே அதிகம் நடைபெறும் துறையாக பள்ளிக் கல்வித்துறை மாறியுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள இத்தகைய பயங்கரமான சறுக்கல்கள் அரசின் தோல்வியை காட்டுகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்த விசயத்துக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். சிறுபான்மை முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தித்தர வலியுறுத்தியும், தமிழக சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகளை வாக்குறுதிபடி விடுதலை செய்ய வலியுறுத்தியும் எதிர்வரும் நவம்பர் 16 அன்று தலைநகர் சென்னையில் லட்சக்கணக்கானோர் அணிதிரளும் மாபெரும் பேரணியை நடத்த எஸ்டிபிஐ கட்சி திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments are closed.